வெள்ளி, 18 அக்டோபர், 2013


வேம்பு (வேப்பமரம்):
-----------------------------
நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் வேப்பமரத்தை அழைக்கிறோம் . பூலோகத்தைக் காத்து வரும் மாரியம்மனுக்கு இவ்வேம்பின் இலைகள் மிகவும் விருப்பமானது என்று கருதி வருகிறோம். இம்மரம் சக்தியின் வடிவம் என்றும், அரச மரம் இறை வடிவம் என்றும் கருதி அவற்றை இணைத்து நட்டு வைத்து வணங்கி வருகிறோம்.
வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை. நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும். இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.
இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஒசான் (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய் , வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த , ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.
இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள் . இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும் . இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.
சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விஷ கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.
மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.
நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.
வேப்பம்பூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.
மரங்கள் அனைத்திலும் புனிதமாகவும், பலவகையான நோய்களை குணப்படுத்த வல்லதுமாக இந்த வேப்பமரம் கருதப்படுகிறது. இதனால் நாமும் கோயில்கள், குளக்கரை பொது இடங்கள் போன்ற பகுதிகளில் நட்டு வைத்து பராமரித்தால் விஞ்ஞான ரீதியாகவும் ,சாஸ்த்திர ரீதியாகவும் பல நன்மைகளை பெற்று வாழலாம்.
நன்றி : Knigt Spot Mani

ஆலமரமே விநாயகருக்கு கோவிலாக . .
கோவில் கற்களால் ஆனது பார்த்திருப்போம்.மரத்தாலான தேர்கள் உண்டு .ஆலமரமே விநாயகருக்கு கோவிலாக அமைத்திருக்கும் அற்புதம் கும்பகோணம் அருகே சிவபுரம் செல்லும் வழியில் இருக்கிறது.பெயருக்கு ஏற்றார் போல் வானுயர நிற்கும் ஆலமரத்தின் உள்ளே வீற்றிருக்கிறார் இந்த ஆகாய விநாயகர் .கும்பகோணம் பகுதிக்கு வரும்போது இவரையும் தரிசித்து செல்லுங்கள்... 


ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!



கோயில்கள் இன்று ஆன்மிகப் பரிபூரணத் தன்மையுடன் கட்டப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விஷயமே. படாடோபம் மற்றும் மற்ற நோக்கங்கள் பிரதானமாகப் போய் ஆன்மிகமும், பக்தியும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை இன்று அதிகம் இருக்கிறது. தெய்வீக சக்தி சூரியனாய் ஒளி வீசிக் கொண்டு இருந்தாலும் அஞ்ஞானப் போர்வைக்குள் நம்மைக் கட்டிக் கொண்டு காரிருளில் மூடங்கிக் கிடக்கும் அவலம் அதிகம் இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் கூட பக்தியுடனும், மனத்தூய்மையுடனும் கோயிலுக்குச் சென்றால் அஞ்ஞானப் போர்வை விலகி தெய்வீக அருளை முழுமையாகப் பெற முடியும்.

இப்படி முழுமையாக தெய்வீக அருளைப் பெற்றவர்கள் நாளாவட்டத்தில் தங்கள் உள்ளத்தையே கோயிலாக்கிக் கொள்ள முடியும். அப்படி திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார்.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.”

உள்ளமே சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்றும் திருமந்திரம் விளக்குகிறது.

ஆனால் அப்படி அகக்கோயில் அமையும் உயர்நிலை ஏற்படும் வரை தெய்வீக அருளைப் பரிபூரணமாகப் பெற புறக்கோயில்களில் முறையாகத் தொழுதல் மனிதர்களுக்கு அவசியமாகிறது.